தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தனது பதவி காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பணிகளுக்கான டெண்டர்களை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் டெண்டர் வெளிப்படை சட்டத்தின் கீழ் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தார் பெயரில் நிலங்கள் கட்டிடங்கள் மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர், ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலும் அவரது பினாமி பெயர்களிலும் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இவர் தேர்தலின் போது, குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பு 53 லட்சத்து 56 ஆயிரத்து 889 என்றும் ஆனால் 2011 தேர்தலில் 26 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 790 ரூபாய் என்றும் சுட்டிக்காட்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைய படிவத்தில் சொத்துக்களை மறைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாகவும், ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.