தமிழ்நாடு

”இன்னுயிரை காக்க நம்மை காக்கும் 48” - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காக்க தமிழ்நாடு அரசு புது திட்டம்!

"இன்னுயிர் காப்போம் திட்டம்" குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

”இன்னுயிரை காக்க நம்மை காக்கும் 48” - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காக்க தமிழ்நாடு அரசு புது திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் "இன்னுயிர் காப்போம் திட்டம்" குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (18-11-2021) தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து, விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கைகள் வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். ஒரு இலட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் (Fatality Rate) 23.9 என்றிருப்பது குறைக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையிலும், சாலையில் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைத் தவிர்ப்பதற்குமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், சாலைப் பொறியியல், வாகனப் போக்குவரத்து, காவல் துறை, மருத்துவத் துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து, கருத்துத் திரட்டலின் அடிப்படையில் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் (Road Safety Authority) என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிர்வாக, நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும்.

சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், சாலைப் பொறியியல் தொடர்பான இடைவெளிகளை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக அணுகி, புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து, தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளை தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், "நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும்.

சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும் பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்த திட்டத்தின்கீழ் மருத்துவம் செய்யப்படும். உறுதியளிப்பு அடிப்படையில் செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.

சேத குறைப்பு அடிப்படையில் (Damaged Control) உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வகை செய்யப்பட்டுள்ளது. 12 மாத காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன்பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

• விபத்து நேர்ந்தவுடன், தாமதத்தைத் தவிர்த்து சரியான மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் விபத்துக்குள்ளானவர்களை மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளில் அழைத்துச் செல்வதும், உடனடி மருத்துவத்தை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் செயல்திட்டமாகும். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முக்கிய 5 கூறுகள்

1. விரைவாக அணுகுதல் (Emergency Response),

2. உயிர் மீட்பு சிகிச்சை , நிலைப்படுத்துதல் (Rescue and Resuscitation),

3. பாதிப்பை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள்

(Damage Control Surgeries),

4. இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல்,

5. மறுவாழ்வு சிகிச்சை (Rehabilitation) ஆகும்.

சாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" திட்டம் செயல்படும்.

இளைய தலைமுறையினருக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள சாலை விதிகள் குறித்த நெறிமுறைகளை மாணவர்களது அன்றாட நடைமுறையில் பிரதிபதிலிப்பதை உறுதி செய்வது முக்கியமான செயல்திட்டமாகும்.

சீரான சாலைகளும், நம்மைக் காக்கும் 48 மணி நேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும், உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

banner

Related Stories

Related Stories