தமிழ்நாடு

“வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.2,629 கோடி நிவாரணம் தேவை” : அமித்ஷாவிடம் வலியுறுத்திய தமிழக அரசு!

தமிழக மழை வெள்ள நிவாரணத் தொகை தொடர்பாக, தி.மு.க மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார்.


“வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.2,629 கோடி நிவாரணம் தேவை” : அமித்ஷாவிடம் வலியுறுத்திய தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்துக்கு 2,629 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிக அளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், தமிழக அமைச்சர்கள் குழுவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளைக் கணக்கிட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் தமிழக மழை வெள்ள நிவாரணத் தொகை தொடர்பாக, தி.மு.க மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து வலியுறுத்தினார்.

இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50,000 ஹெக்டேர் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 526 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்கள் அழிந்துள்ளன. 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 50,000 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 2,100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழகத்தைச் சீரமைக்க 2,079 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இதில் மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழக அரசு கேட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பு சேதத்தைப் பார்வையிட ஆறு பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு உடனடியாக இன்று தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories