சென்னையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள மற்ற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் 300 பேர் சென்னையில் தங்கியுள்ளனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதன்படி கொளத்தூர் ஞானாம்பாள் தோட்டம், திரு.வி.க.நகர் குடியிருப்பு, ராமர் கோயில் உள்ளிட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து ஜி.கே.எம்.காலனி, ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு,
கொளத்தூர் பகுதியில் தேங்கிய மழைநீரை அரசு இயந்திரம் துரிதமாக செயல்பட்டு 2 நாட்களில் அகற்றியது. மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் 5000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளோம் என கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் மக்களோடு மக்களாக செயல்பட்டு வருகிறார். மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு முதலமைச்சர் செயல்படுகிறார். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர மாநிலங்களில் உள்ள ஊடகங்களில் தமிழக முதலமைச்சர் போல் எங்கள் மாநிலத்திற்கு கிடைக்கவில்லையே என மற்ற மாநில மக்கள் ஏங்குகிறார்கள் என செய்தி வெளியிடும் அளவிற்கு முதலமைச்சரின் பணி சிறப்பாக உள்ளது என பேசினார்.
பொதுப்பணித்துறையிலிருந்து மற்ற மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை அழைத்து இரவு பகல் பாராமல் பணியாற்றினோம். சென்னையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள மற்ற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் 300 பேர் சென்னையில் தங்கியுள்ளனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.