முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் இணைந்து சுயலாபத்திற்காக அரசு சொத்தை தனியார் நிறுவனத்திடம் குறைந்த விலைக்கு விற்றது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகி புகார் ஆதாரங்களை அளித்தார்..
சென்னை கோயம்பேட்டில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை கடந்த பிப்ரவரி மாதம் அவசர சட்டம் மூலம் பன்னீர்செல்வத்திற்கு நெருங்கியவர்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக தெரிய வருகிறது.
ஒரு சதுர அடி 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் 12.500 ரூபாய் என அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி சுய லாபத்திற்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருங்கியவர்களுக்கு ஒரு வார காலத்தில் விற்பனை செய்து கட்டுமான பணி தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகி ஆதாரங்களை வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அளித்திருந்த நிலையில் இன்று ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி புகார் தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி முறைகேட்டினால் அரசுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முறைகேடு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வழங்கி உள்ளதாகவும் கூறி உள்ளார்.
மேலும் சிபிராஜ் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி வருவதாகவும் விரைவில் அவர் செய்த முறைகேடு தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.