கோவை மாவட்டம், நீலம்பூர் நெடுஞ்சாலையில் போலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இரண்டு இளைஞர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர்கள் திடீரென வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
உடனே காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் போலிஸார் தப்பிச் சென்ற இளைஞர்களை விரட்டிச் சென்றனர். போலிஸார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த அவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு, ஆளுக்கொரு திசையில் ஓடியுள்ளர்.
பின்னர் போலிஸார் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி இரண்டு பேருக்கு பின்னாலும் தனித்தனியாக விரட்டிச் சென்றனர். இதில் காவல் ஆய்வாளர் மாதையனிடம் ஒரு இளைஞர் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து, போலிஸாரிடம் பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும், தப்பிச் சென்றவர் சென்னையைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கோவையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து ஹரிஹரசுதன் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தப்பிச் சென்ற சங்கரை போலிஸார் தேடிவருகின்றனர்.