மழை பாதிப்பு முடிந்ததும் அதிமுக செய்த ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர், திரு.வி.க.நகர், என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களை சந்தித்த முதலமைச்சர் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக வில்லிவாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 8ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜானகிராமன் நகர், ராஜா தோட்டம், வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்த முதலமைச்சர், அரிசி, பிஸ்கட், பாய், பிரட் அடங்கிய நிவாரண பொருட்களின் தொகுப்பை வழங்கினார். அப்போது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பயிர் சேதம் குறித்து கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை பயிர் சேதம் குறித்து அறிக்கை வந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
வெள்ள பாதிப்பு குறித்து முழு தகவல் கிடைத்ததும் நிவாரணம் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்படும். தேவைப்பட்டால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க அனுப்பபடுவார்கள் என்றார் .
தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகள் குறித்து தான் ஒதுபோதும் கவலைப்படுவதில்லை எனக் கூறியதோடு, மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்கள் மட்டும் அல்ல அனைவருக்கும் உழைப்பதே எங்கள் கொள்கை என்றார்.
மழை வெள்ள பாதிப்புகள் குறைந்தும் அதிமுக செய்த அக்கிரமம் அநியாம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.