நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட திருப்பூண்டி, வேட்டைக்காரனிப்பு, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்ட விளைநிலங்களை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் மிஸ்ரா ஆய்வு செய்தார்.
மழை வெள்ளத்தால் மூழ்கிய நெற்பயிர்களின் தரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதுல் மிஸ்ரா, “நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து தமிழ்நாடு அரசு உணவு வழங்கி வருகிறது.
மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்சிப் பாகுபாடின்றி தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.