வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3வது நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மழைநீர் தேங்கிய சாலைகளில் நடந்து சென்று பாதிப்புகளைப் பார்வையிடுவதோடு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால், தண்ணீர் தேங்கியதாகவும், 500 இடங்களில் பம்ப்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுவதாகவும் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயருக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாகக் கூறி புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
அப்படி, கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, படகில் ஏறி அமர்ந்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள பாதிப்பை பார்வையிடுவதாகக் கூறி பாதுகாப்பாக படகில் ஏறி வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆங்கிள் பார்த்து படப்பிடிப்பு நடத்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அண்ணாமலையின் இச்செயலை கிண்டல் செய்து வருகின்றனர்.