வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவுமுதல் சென்னையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதையடுத்து வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடக்கிவிடப்பட்டுள்ளது.
நேற்று காலையிலிருந்தே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும் சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இன்று காலையில் சென்னை ராயபுரம், ஆர்.கே.நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீரை வெளியேற்றத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.