கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சிகளைக் கலைத்ததாக கைது செய்யப்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலிஸார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
இவர்கள் இருவர் மீதும் 201, 211, 404 பிரிவுகளின் கீழ் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் தனிப்படை போலிஸார் கூடுதல் விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் மனு அளித்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் 11 நாட்களும், நண்பர் ரமேஷிடம் 10 நாட்களும் காவல்துறை மூலம் கூடுதல் விசாரணையானது நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 6 ம் தேதி இவர்கள் இருவரையும் குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி மீண்டும் கூடலூர் சிறையில் அடைத்தனர்.
இன்று இவர்களுக்கு நீதிமன்ற காவல் முடியும் நிலையில் தற்போது தனிப்படை போலிஸார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் நேரில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா இவர்கள் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தும், மேலும் இவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வரும் 22.11.2021வரை காவலில் வைக்க மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.