கடந்தாண்டு கொரோனாவால் எல்லா தொழில்களும் முடங்கி, ஏராளமானோர் வேலையிழந்தனர். உற்பத்தி பெருமளவில் சரிந்து, சிறு தொழிலதிபர்களும், பெரு தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால் தற்போது வேலைவாய்ப்பில் தமிழ்நாடு மீண்டெழுந்து வருகிறது என ‘தினத்தந்தி’ நாளேடு 3.11.2021தேதியிட்ட இதழில் ‘வேலைவாய்ப்பில் மீண்டெழும் தமிழ்நாடு!’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:
எந்தவொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றால், அதற்கு அடையாளமாக தொழில் வளர்ச்சி, வணிக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு எவ்வளவு பெருகியிருக்கிறது? என்பதை பொறுத்துத்தான் அளவிடப்படுகிறது. அதை வைத்துத்தான் அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது.
அந்தவகையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் எல்லா தொழில்களும் முடங்கின. ஏராளமானோர் வேலையிழந்தனர். உற்பத்தி பெருமளவில் சரிந்தது. சிறு தொழிலதிபர்களும், பெருந்தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சம் தேடிவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இங்கே வேலையில்லை என்பதால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அலை அலையாய் திரும்பிச் சென்றனர்.
இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழ்நிலையில், தமிழக அரசும், தொழில் வளர்ச்சியை உருவாக்க அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தன. தொழில் துறை செயலாளர் முருகானந்தம், சிறு தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் கொண்ட இருவர் அணி, சரிந்த தொழில் வளர்ச்சியை மீண்டும் உச்சநிலைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருவரும் அடிக்கடி தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, “நீங்கள் தொழிலை தொடங்குங்கள். உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்கும்” என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.
இதன் விளைவாக, கடந்த சில மாதங்களாக, முறைசாரா வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், முறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 74 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன” என்று தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகள் என்றால், நிச்சயமாக அது தொழில் நிறுவனங்களில் புதிதாக வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளாகத்தான் இருக்க முடியும்.
கடந்த சில மாதங்களாகவே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில், முதல் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையிலும், சேவை துறையிலும் மீண்டெழுந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. உற்பத்தி துறை, பொறியியல் துறை மற்றும் கட்டுமான துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு, புதிதாக தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களும் இப்போது தமிழ்நாட்டுக்கு திரும்பி வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 49 லட்சத்து 48 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் இந்த பிரிவிலுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது 8 சதவீதம் ஆகும். இந்த நிறுவனங்கள் மூலம் 96 லட்சத்து 73 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அதிக வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சிபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுதவிர, 38,131 பெருந்தொழில்கள் இருக்கும் நிலையில் புதிது புதிதாக தொழில்களைத் தொடங்குவதற்கும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல தொழில் முனைவோரை ஈர்த்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில், ஒரு கலங்கரை விளக்கமாக திகழும் தமிழ்நாட்டில் 2030-31-ம் நிதியாண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடிக்கான பொருளாதாரமாக மாற்றுவதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ள மு.க.ஸ்டாலின் அரசின் முயற்சி நிறைவேறவேண்டும் என்றால், ஆண்டுதோறும் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும். அந்த இலக்கை நோக்கி பணியாற்றுவதை அடையாளமாகத்தான் வேலைவாய்ப்பு பெருக்கம் கருதப்படுகிறது. இது பாராட்டுக்குரியது என்றாலும், வேண்டும்.. வேண்டும்.. இன்னும் வேகம் வேண்டும்.