கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி மேலாளராக ஜானகி( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முரளி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஆபாச வலைதள பக்கங்களில் ஆபாசப்படம் பார்த்து வந்துள்ளார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த முரளியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தை யார் அனுப்பினார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த முரளிக்கு ஃபோன் கால் ஒன்று வந்துள்ளது.
அதில், எதிர்தரப்பில் இருந்து பேசிய மர்ம நபர் ஒருவர், உனக்கு வந்திருக்கும் புகைப்படம் போன்று உன் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் இருந்த முரளியிடம் இதுபோன்று நடக்காமல் இருக்கவேண்டும் என்றால், நான் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
மர்ம நபர் கூறியபடியே அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு 49 ஆயிரம் ரூபாயை முரளி அனுப்பியுள்ளார். ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு மர்ம நபர் முரளியை மிரட்டியுள்ளார். இதனால் செய்வது அறியாது முரளி குழப்பத்தில் இருந்ததைப் பார்த்து மனைவி விசாரித்த போது நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி சைபர் கிரைம் போலிஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் போலிஸார் இதுதொடர்பாக வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையை நடத்தியதில், பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டனர். மேலும் இரண்டு பேரும் இன்ஜினியராக பணியாற்றுவதால் ஆபாச வலைதள பக்கங்களை உருவாக்கி, அதில் ஆபாச படங்கள் பார்க்கவரும் நபர்களின் தகவல்களை திருடி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு பேரிடம் இருந்த 3 லட்சம் பணம், இருசக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன் மற்றும் லேப்டாப்க்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.