கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளாவும், அவரின் கணவர் ராஜீவும் தொழிலதிபர்கள். கடந்த 2020, ஜூலை மாதம் ஷர்மிளா அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி பேசிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஷர்மிளா பேசிய வீடியோவில் அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டு, “ஹைகமாண்ட் பெயரைச் சொல்லி அவர் முடித்துக் கொண்ட காரியங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அப்போது ஆளும் கட்சி என்பதால் இந்த விவகாரங்களை மூடி மறைக்கும் வேலையும் விஜயபாஸ்கர் தரப்பினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஷர்மிளா நெல்லை காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். தீபாவளி முடிந்து டி.ஜி.பியை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் இந்த சூழ்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காக நெல்லையில் டி.ஐ.ஜி.யிடம் புகார் கொடுத்ததாக சர்மிளா தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷர்மிளா, நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் ஒன்றாக பல இடங்களில் கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது என்னுடைய நகைகளை பத்திரமாகவைப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யா விஜயபாஸ்கரும் சேர்ந்து என்னிடம் இருந்து 14 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டனர். இப்போது வரை அதைக் கேட்டால் திருப்பி தரவில்லை.
ஆனாலும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்ததால் கடந்த 2019 ம் ஆண்டு 3 கோடி ரூபாய் பணம் மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு, என்னை மிரட்டி வீடியோவும் எடுத்துக் கொண்டனர். இந்த பணத்தையும் அவரது நெருங்கிய பழக்கமுள்ள மருத்துவர் மூலமாகத்தான் திருப்பித் தந்தனர். இன்னும் எனக்கு தரவேண்டிய பணத்தை நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால் என் மீது பொய் வழக்குகள் போட்டு என்னை தமிழகத்திற்குள் வர விடாமல் செய்கின்றனர்.
இப்போதும் எனது வழக்கறிஞர்கள் திருநெல்வேலியில் இருப்பதால் அவர்களை சந்திக்க செங்கோட்டை வழியாக வந்தால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன். மேலும் தமிழக முதல்வரையும் தீபாவளிக்கு பிறகு சந்தித்து அமைச்சர் குறித்த புகார் மனு அளிக்க உள்ளேன் தெரிவித்தார்.