சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் (விற்பனை) பதவிக்கான பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில் சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கரூர் மாவட்டம், புகளூர்-காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் “துணை மேலாளர் (விற்பனை)” பதவிக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
சேலம் மாவட்டம், பெரியவடக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒரு மாற்றுத்திறனாளி தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்று ரியோ, ப்ரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2016ல் தங்கப்பதக்கமும், இந்தோனேசியாவில் நடைபெற்ற 3வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும், துபாயில் நடைபெற்ற உலக பாராதடகள சாம்பியன்ஷிப் 2019ல் வெண்கல பதக்கமும், டோக்கியோ, ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2020ல் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
BBA பட்டதாரியான மாரியப்பன் தங்கவேலு, தற்போது பெங்களுரில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் முதுநிலை பயிற்சியாளராக (தடகளம்) பணிபுரிந்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாரியப்பன் தங்கவேலு அவர்களின் சர்வதேச விளையாட்டு சாதனைகளை கருத்தில் கொண்டு, அவரை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் “துணை மேலாளர் (விற்பனை)” பதவிக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாராலிம்பிக்ஸ் விளையாட்டுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கிருபாகரராஜ், பொதுச் செயலாளர் கே.ஜி.மெர்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.