தூத்துக்குடி மாவட்டம், பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் முனுசாமிக்கு மனநிலை சரியில்லாததால் ஆறுமுகம் அவரை வீட்டிலேயே வைத்துக் கொண்டு பார்த்து வருகிறார். மற்ற அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார்.
இதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மேலும் மூத்த மகனுக்கு மனநிலை பிரச்சனை இருப்பதால் சொத்துகளை மற்ற இரண்டு பேருக்கு எழுதி வைத்துள்ளார் ஆறுமுகம். இதன் காரணமாக சொத்து தகராறு இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது மகன் முருகன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதைக் காட்டுவதற்காகத் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இரவு வீட்டிலேயே முருகன் தங்கியுள்ளார்.
அப்போது, முனுசாமி திடீரென தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அவரே காவல்நிலையம் சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் ஆறுமுகம் வீட்டிற்குச் சென்று முருகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் சொத்து பிரித்ததில் தனக்கு ஒரு பங்கு கொடுக்காமல் மற்ற சகோதரர்கள், சகோதரிகளுக்கு மட்டும் பிரித்துக் கொடுத்ததில் முனுசாமி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இது குறித்து தம்பி முருகனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் உனக்குத்தான் குடும்பம் எதுவும் இல்லை. பின்னர் எதற்குச் சொத்து என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்ததால் தம்பியைக் கொலை செய்ததாக முனுசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.