தமிழ்நாடு

“100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை... உடனடியாக நிதியை விடுவியுங்கள்” : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை... உடனடியாக நிதியை விடுவியுங்கள்” : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 1-11-2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்றும், தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி இடப்பெயர வழிவகுக்கும் என்பதனைச் சுட்டிக்காட்டியும், பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தினை வழங்கிட ஏதுவாக, உடனடியாக நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

banner

Related Stories

Related Stories