தமிழ்நாடு

45 சாட்சிகளிடம் முடிந்த விசாரணை - விரைவில் கைது நடவடிக்கை? : அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு வழக்கு!

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

45 சாட்சிகளிடம் முடிந்த விசாரணை - விரைவில் கைது நடவடிக்கை? : அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு வழக்கு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடந்த 25-ம் தேதி தனபால் மற்றும் ரமேஷை போலிஸார் கைது செய்தனர். நேற்று தனபாலை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் போலிஸாருக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆஜராகியிருந்தனர்.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு தேவை என வலியுறுத்தினார். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை நவம்பர் மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறியதாவது: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிப்படை போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 45 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும். விசாரணைக்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டது. இதனால், விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலிஸார் மனு தாக்கல் செய்தனர். இதனால், 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2-ம் தேதி நடக்கும். வழக்கில், மின்னணு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. செல்போன் ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்த அவகாசம் தேவை. இவ்வாறு அவர் என்றார்.

banner

Related Stories

Related Stories