“இல்லம் தேடிக் கல்வி” திட்டம் - தமிழக பள்ளிக் கல்வியினை மேலும் மேம்படுத்தும்!” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மானுடம் இதுவரை சந்தித்திராத ஒரு பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதிக இழப்பைச் சந்தித்தவர்கள் பள்ளிக் குழந்தைகளே. பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் செயல்படுத்த இருக்கும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவச் செல்வங்களும், அவர் தம் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கையரும் என மொத்தம் 86 ஆயிரத்து 550 நபர்கள் இத்திட்டத்தில் சேவையாற்ற பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்தவர்களின் கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கொரோனா பெருந்தொற்றால், கடந்த 19 மாத காலத்தில், கற்றலில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்யும் பெரும்பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக விளங்கும் வகையிலேயே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் தெரியவந்துள்ளது. அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர்.
இதுமட்டுமல்ல; இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும். மேலும், வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்.
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவர். எனவே, இத்திட்டத்தின் நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும், இத்திட்டத்தினை ஆதரித்து, நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோத்திட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.