ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தாய் மற்றும் குழந்தையை மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பெரும் பாறைகள் கொண்ட இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த தாயையும் குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் இருவர் பிடிமானம் இல்லாமல் வெள்ளநீரில் விழுந்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் போராடி நீந்தி கரை சேர்ந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
வெள்ளப்பெருக்கின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது துணிவோடு போராடி தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய இளைஞர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த தீரமிக்க செயலை பாராட்டியிருப்பதோடு, அவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்,