கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கும் இதில் தொடர்புள்ளதாக கூறி தனிப்படை போலிஸார் அவரை நேற்று பிற்பகல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கைது செய்தனர்.
அவரது உறவினர் சேலம் ஆத்துரை சேர்ந்த ரமேஷ் என்பவரும் கைது செய்யபட்ட நிலையில் இருவரும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் நேற்றிரவு ஆஜர்படுத்தபட்டனர். அவர்கள் இருவரையும் நவ. 8 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். அதனையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு நள்ளிரவு 11.30 மணிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே தனபால் மற்றும் ரமேஷுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின்போது மறைத்துள்ளனர். அத்துடன் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தபோது கனகராஜின் செல்போனில் உள்ள எண்களை, அவரது சகோதரர் தனபால் அழித்துள்ளார்.
இதனால் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலிஸார் கைது நேற்று கூடலூர் சிறையில் அடைத்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சோலூர்மட்டம் ஆய்வாளர் வேல்முருகன் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபாவிடம் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அந்த மனுவில் நேற்று கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் தற்கொலை குறித்து தனிப்படை போலிஸார் மறு விசாரணை நடத்தி வரும் நிலையில், தினேஷ் தற்கொலை விவகாரத்திலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.