சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் முதல் தளத்தில் தூங்கியுள்ளனர்.
அப்போது, இவர்களின் அறையை பூட்டிவிட்டு மர்ம நபர்கள் வீட்டிலிருந்து 100 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தினகரன் தலைமையில் கொள்ளை சம்பவம் நடந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தினகரன், சிவா, லோகேஷ், மோகன், ராணி உள்ளிட்ட ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் 10 நாட்களாக இளங்கோவன் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடித்தாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் மறைந்த திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பது தெரியவந்தது. அதேபோல் இந்த கொள்ளை கும்பல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பதையும் போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இந்த கும்பல் வசதி படைத்தவர்களின் வீடுகளைக் குறிவைத்து கொள்ளை அடித்து வந்துள்ளனர்.