தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி வங்கிக்குச் சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு அனிதா சென்றுள்ளார். ஆனால், அவர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அனிதாவின் எதிர்வீட்டில் இருக்கும் கார்த்திக் என்ற இளைஞர் கடைசியாக அவரிடம் செல்போனில் பேசியது தெரிந்தது.
இதனால் அவரிடம் போலிஸார் விசாரணை செய்தனர். அப்போது அனிதாவைக் கொலை செய்து சோழபுரம் கருவேலங்காட்டில் புதைத்ததாக அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அனிதாவும், கார்த்திக் மனைவி சத்யாவும் பள்ளி தோழிகள். இந்த நட்பின் காரணமாக சத்யா, கார்த்திக் ஆகியோர் பல லட்சம் ரூபாய், 10 பவுன் நகைகளைக் கடனாக அனிதாவிடம் வாங்கியுள்ளனர். இதையடுத்து வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர் அடுத்த மாதம் வருவதால் பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதனால் திட்டம் போட்டு அனிதாவை வீட்டிற்கு வரவழைத்து சத்யா, அவரது கணவர் கார்த்திக், இவரின் தந்தை ரங்கநாதன், சத்யாவின் சகோதரர் சரவணன் ஆகியோர் அடித்து கொலை செய்து சோழபுரத்தில் உள்ள கருவேலங்காட்டில் புதைத்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் அனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கொலை செய்த நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.