தமிழ்நாடு

கிராம மக்களின் உணர்வுதான் ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வு.. மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும்!

தி.மு.க. பெற்ற வெற்றிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் காரணம் என தினத்தந்தி தலையங்கம் பாராட்டியுள்ளது.

கிராம மக்களின் உணர்வுதான் ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வு.. மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி இமாலய வெற்றி பெற்றிருப்பதற்குக் காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை தான் என்று தினத்தந்தி தலையங்கம் பாராட்டியுள்ளது.

16.10.2021 தேதிய தினத்தந்தி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘கிராமங்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு என்று காந்தியடிகள் நம்பினார். அந்த முதுகெலும்பான கிராமங்களை வளர்க்கவேண்டும், அந்த கிராமங்கள் இன்னும் வளம்பெறவேண்டும், பட்டணங்களில் உள்ள வசதி, வாய்ப்புகளை கிராமங்களுக்கும் தரவேண்டும்’ என்றார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அந்தவகையில் கிராம நிர்வாகங்களை மேற்கொள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கிராமப்பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்டப்பஞ்சாயத்து ஆகியவை ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 12 ஆயிரத்து 524 கிராமப்பஞ்சாயத்துகளும், 388 பஞ்சாயத்து யூனியன்களும், 37 மாவட்ட பஞ்சாயத்துகளும் இருக்கின்றன. இதில் ஏற்கனவே 28 மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30-ந்தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்தது. மாவட்டப்பிரிவினை காரணமாக 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடக்கவில்லை. இந்த தேர்தல் நடந்தநேரத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தது. கருணாநிதி மறைந்து, கட்சியின் தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்ற அந்தநேரத்தில் அவர்மீது நம்பிக்கை வைத்து தி.மு.க. அதிகஇடங்களில் வெற்றிபெற மக்கள் வாக்களித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் மீதமுள்ள9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்தன. வார்டுகள் மறுவரையறை செய்யப்பட வேண்டிய காரணத்தால், தேர்தல் தள்ளிப்போனது. அந்தப்பணிகளும் முடிவடைந்து, நீதிமன்றமும் உடனடியாக தேர்தலை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், 2 கட்டங்களாக அதாவது கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்நேரத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வாக்களித்த நீங்கள், ‘உள்ளாட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலருவதற்காக தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் ஓட்டளிக்கவேண்டும்’ என்றார்.

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘உத்தரவிடுங்கள். உங்களுக்கு உழைக்க காத்திருக்கிறோம்’ என்று ஓட்டுகேட்ட மு.க.ஸ்டாலின், இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், ‘மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களே எங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள். உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக-சகோதரனாக-கலைஞரின் மகனாக-கடமை ஒன்றைமட்டும் வாழ்க்கை லட்சியமாக கொண்ட ஒருவனாக செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று ஓட்டுக்கேட்டார்.

மக்களும் மு.க.ஸ்டாலின் மீது கொண்ட பெரும் நம்பிக்கையின் காரணமாக 140 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 128 இடங்களை தி.மு.க.வுக்கும், 7 இடங்களை கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கும், 2 இடங்களை ம.தி.மு.க.வுக்கும், ஒரு இடத்தை வி.சி.க.வுக்கும் வழங்கினர். ஆக 140 இடங்களில் 138 இடங்களை தி.மு.க. கூட்டணியும், 2 இடங்களை மட்டும் அ.தி.மு.க.வும் பெற்றது. அதன் காரணமாகத்தான் 9 மாவட்ட பஞ்சாயத்துகளையும் தி.மு.க. கைப்பற்றியது. இதேபோல், பஞ்சாயத்து யூனியன்களை பொறுத்தமட்டில், 74 பஞ்சாயத்து யூனியன்களிலும் தி.மு.க. வெற்றியை பதிவுசெய்திருக்கிறது.

கிராமப்பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்தலில் கட்சி சின்னம் கிடையாது என்றாலும், மக்களின் தேர்வும் மகத்தான தேர்வாக இருந்தது. தென்காசி மாவட்டம் கடையம் ஊரிலுள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தலைவராக 22 வயது என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சாருகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனிலுள்ள சிவந்திப்பட்டி கிராமத்தலைவராக 90 வயது பெருமாத்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாயத்துகளில் யாரை தேர்ந்தெடுத்தால் நமக்கு நல்ல பணியாற்றுவார் என்று மனத்தராசில் எடைபோட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

தி.மு.க. பெற்ற வெற்றிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் காரணம். இது அவருடைய 5 மாதகால ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. மக்கள் அவருடைய ஆட்சிக்கு போட்ட மதிப்பெண்கள்தான் இந்த இமாலய வெற்றி என்பதே உண்மையான காரணமாகும். கிராம மக்களின் உணர்வுதான் ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வு. அந்தவகையில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் விரைவில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலையும் நடத்தி மக்கள் பிரதிநிதிகளின் கையில் நிர்வாகத்தை வழங்குவதே இப்போதைய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories