உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அபாரமாக வென்று சாதனை படைத்துள்ளது. உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரட்டும் என்று ‘தினகரன்’ தலையங்கம் புகழாரம் சூட்டியுள்ளது.
16.10.2021 தேதிய ‘தினகரன்’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டில்தான் உள்ளாட்சி தேர்தல் முழுமையான அளவில் நடந்தது. 5 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் உள்ளாட்சி தேர்தல், கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலை நடத்துவதற்கான எந்தவித முயற்சியும், அப்போதைய அ.தி.மு.க அரசு மேற்கொள்ளவில்லை. பல்வேறு காரணங்களை கூறி இத்தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது.
இதனால் தனி அலுவலர்கள் கண்காணிப்பில் உள்ளாட்சிகள் செயல்பட்டு வந்தன. இதனால் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு அல்லல்பட்டு வந்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளிலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல், புதியதாக துவங்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கடந்த 2019, டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.
514 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் தி.மு.க 244, அ.தி.மு.க 214 இடங்களில் வெற்றி பெற்றன. 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் தி.மு.க 2,095, அ.தி.மு.க 1,792 இடங்களை பிடித்தன. அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றின. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி..முக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அபாரமாக வென்று சாதனை படைத்துள்ளன.
மொத்தமுள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்தையும் தி.மு.க-வே கைப்பற்றியுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. வெற்றி முடிவுகளின்படி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை பிடித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 5, விடுதலை சிறுத்தைகள் 3 இடங்களை பெற்றுள்ளன. அ.தி.மு.க 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு காலங்களில் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தங்களது வளத்தை பெருக்கிக் கொள்வதிலேயே குறியாக செயல்பட்ட அக்கட்சியினருக்கு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர். இதன்மூலம் தோல்வி பயத்திலேயே பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போடப்பட்டது அம்பலமாகி உள்ளது. மேலும், ம.நீ.ம, நாம் தமிழர் கட்சிகளின் நிலைமையும் கவலைக்கிடமாக மாறி உள்ளது.
அடுத்ததாக நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தல் அடுத்தாண்டு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசின் சிறப்பான நடவடிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட காரணங்களால், தற்போதைய நிலவரப்படி இந்த தேர்தலிலும் தி.மு.க அபாரமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மேலும், கொரோனா பரவல் குறையும் சூழலில், பொது சுகாதாரத்தை மேம்படுத்த நகரங்களிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.