12ம் வகுப்பு வரை பயின்ற 42 வயதுக்குட்பட்ட ஆஷா பணியாளர்களுக்கு நிரந்தர கிராம சுகாதார செவிலியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட பெண் மருத்துவ களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் அனைத்து நகர அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
ஒன்றிய அரசிடம் ஆஷா பணியாளர்கள் குறித்தான கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர் இடத்தில் எடுத்துரைத்து முடிந்தவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆஷா தொழிலாளர்கள் 2,650 குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவிலான செயல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோரும் ஊக்கத் தொகையாக இன்று வரை 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆஷா பணியாளர் சங்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று முடித்த 42 வயதுக்குட்பட்ட பெண்களை கிராம சுகாதார செவிலியராக ஆண்டுக்கு 60 பேர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி, நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஆஷா பணியாளர்கள் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயண சீட்டு மற்றும் அவர்களுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை நெருங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் மத்திய அரசு குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சிறந்த முறையில் செலுத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.