கடையில் வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, காலிஃளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.
அதை வீட்டிற்குச் சென்று அவர் சாப்பிட முயன்றபோது, அதில் 'பேண்டேஜ்' இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள் முறையான பதில் அளிக்காததால் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
காலிஃப்ளவர் பக்கோடாவில் பேண்டேஜ் இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
உணவுப் பொருட்களை வெளி இடங்களில் வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் குறித்தோ கலப்படம் குறித்தோ 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.