முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (15-10-2021) வருமாறு:
‘தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களைத்தான் தனியாருக்கு விற்கிறோம்’ - என்ற கருத்தை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது புதிய கருத்தாக இருக்கிறது. ஆனால், தேவையற்ற எதையும் தனியார் வாங்க மாட்டார்கள் என்பதுதான் பொருளாதாரம் படித்த இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மட்டுமல்ல, வலதுசாரிகளுக்கும் தெரியும்.
‘தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தான் தனியாருக்கு விற்கிறோம்’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் அது அரசுக்குச் செய்யும் சமாதானம் ஆகாது. ‘பொதுத்துறை நிறுவனங்கள்தான் நவீன இந்தியாவின் கோவில்கள்’ என்றார் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. கோவில்களை விற்றுக் கொண்டு இருக்கிறார் பா.ஜ.க. பிரதமர். அதுவும் ‘தேவையற்ற’ என்ற அடைமொழியுடன்!
விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இந்தியன் ஸ்பேஸ் அசோசியேசன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னால் அதில் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி. அங்கு பல்வேறு கருத்துகளைச் சொன்னார். அதில் மிக முக்கியமானது இதுதான்:
1. சுரங்கம், நிலக்கரி, பாதுகாப்பு, விண்வெளி ஆகிய துறைகள் தனியார் முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. அரசின் இருப்பு தேவையில்லாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு திறந்துவிடும் கொள்கை முடிவில் தமது அரசு தெளிவாக இருக்கிறது.
2. தேசிய நலன் மற்றும் தொழில்துறை சார்ந்த வெவ்வேறு பங்காளர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்ட ஒழுங்காற்று நடவடிக்கைக்கான சூழலை தமது அரசு எடுத்துள்ளது .
3. இழப்பில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று இந்திய அரசு நீண்ட நாட்களாக எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. இது தமது அரசின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தைக் காட்டுகிறது.
இந்தியப் பிரதமர்கள் இந்திய அரசைப் புகழ்ந்தே அதிகம் பேசுவார்கள். முதன்முதலாக ஒரு இந்தியப் பிரதமர், தனியார் துறையின் ஊக்குவிப்பாளராக மாறி இருக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களே அனைத்துத் தேவையையும் பூர்த்தி செய்து விடும் என்று நாமும் சொல்ல வரவில்லை. தனியார் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால், அதற்காக அரசின் பங்களிப்பை அனைத்தில் இருந்தும் விலக்கிக் கொள்வதும், அனைத்திலும் தனியாரை ஊக்குவிப்பதும் எந்த வகைப்பட்ட பொருளாதாரம்?
பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும், லாபமில்லை என்று சொல்லி தனியாரிடம் விற்பதாக இருந்தால் - அந்த பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் நடத்தாதது யார் குற்றம்? ஒன்றிய அரசின் குற்றமல்லவா? அது ஏன் முடியவில்லை? ஒன்றிய அரசின் திறமையின்மையை மறைப்பதற்காக, தனியாரின் திறமைகள் அதிகளவு ஊக்குவிக்கப்படுவதால் யாருக்கு லாபம்?
பல பத்து ஆண்டுகளாகத் திறம்பட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக திறமையற்றவையாக ஆவதற்கு யார் காரணம்? பல பத்து ஆண்டுகளாக தேவையாக இருந்த நிறுவனங்கள், இன்று தேவையற்றவையாக மாறியதற்கு என்ன காரணம்? ‘தேவையற்றவை’ என்பதற்கு என்ன அளவுகோல்? விமானமோ, ரயிலோ தேவையற்றவையாக ஆகிவிட்டதா?
இரண்டையும் பயன்படுத்துவது மக்களிடம் குறைந்து போய்விட்டதா? அப்படியானால் அரசுக்கு இவை எப்படி தேவையற்றவை ஆகும்! உண்மை.. இது அல்ல. தனியாருக்கு ‘தேவையாக இருக்கிறது’. அதனால் பா.ஜ.க அரசுக்கு அது ‘தேவைற்றதாக’ மாற்றப்படுகிறது. அவ்வளவுதான்!
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி பேசினார். அரசின் தலைவர் பேச்சாக அது இல்லை. தனியார் துறையின் தலைவர் பேச்சாக அது அமைந்திருந்தது. “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று அப்போது பேசினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் போதுதான் இதனைச் சொன்னார். “நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. நாட்டில் பொதுத்துறைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார் துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
குறிப்பாக தொலைத்தொடர்புத்துறையிலும், மருந்துத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்கின்றன. ஏழை மக்கள் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும் போட்டி காரணமாக மக்கள் எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பல நாடுகளுக்கும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு தனியார்துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது.
ஆதலால், தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த காலம் கடந்துவிட்டது. தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரப் போக்கை இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது” என்று அப்போது பேசினார் பிரதமர்.
அவருடைய இதயம் யாருக்காகத் துடிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம். நிச்சயம் மக்களுக்காகவும் இல்லை. அரசுக்காகவும் இல்லை. அவர் தேவையற்றவை என்று சொல்வது பொதுத்துறை நிறுவனங்களையா? மக்களையா? அரசையும் சேர்த்துத் தானா?