சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சங்கர் ஜிவால் வலியால் கூச்சலிட்டபோது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த உதவியாளர் தகவல் அளித்த நிலையில், அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து காவல் ஆணையரின் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கீழ்ப்பாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் ஜிவாலுக்கு இதயத்தில் இரண்டு அடைப்பு இருப்பதால் அதை சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சங்கர் ஜிவாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து ஆஞ்சியோ சிகிச்சை மூலம் ஒரு அடைப்பை நீக்கியுள்ளனர். மேலும் மற்றொரு அடைப்பை நீக்க தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் நலம் குறித்து கேட்டறிய தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தனர்.
ஆஞ்சியோ சிகிச்சையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.