திருச்சி மாவட்டம், சொக்கம்பட்டியில் உயிரிழந்தவரை அடக்கம் செய்யாமல் அவருடைய மகள்கள் பிரார்த்தனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலிஸார் அந்த வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர்களை வீட்டிற்குள்ளே விடாமல் அங்கிருந்த பெண்கள் தடுத்தனர். பிறகு வீட்டிற்குள் சென்ற போலிஸார் உயிரிழந்த நிலையில் மூதாட்டி ஒருவர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து இறந்தவரின் மகள்களான ஜெசிந்தா, ஜெயந்தி ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தாய் கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அப்போதும், அவரது மகள்கள் அவர் உயிருடன்தான் இருக்கிறார் எனத் தொடர்ந்து கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை எடுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சிகள் செய்து அடக்கம் செய்ய வேண்டும் என அவர்களிடம் போலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், மூதாட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்களும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பிரார்த்தனை செய்தால் அவர் சுகமடைந்து எழுந்து வந்துவிடுவார் என நினைத்து அவரது மகள்கள் ஜெசிந்தா, ஜெயந்தி ஆகியோர் உடலை அடக்கம் செய்யாமல் பிரார்த்தனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.