தமிழ்நாடு

“சாமி சிலைகளை உடைத்து எந்திர தகடுகளை திருடி வந்தது ஏன்?” : கைதானவர் கொடுத்த ‘திடுக்’ வாக்குமூலம்!

கோயில் சிலைகளுக்கு அடியில் இருக்கும் எந்திரத் தகட்டை வீட்டில் வைத்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என நம்பி கோயில் சிலைகளை உடைத்து எந்திரத் தகடுகள் தேடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“சாமி சிலைகளை உடைத்து எந்திர தகடுகளை திருடி வந்தது ஏன்?” : கைதானவர் கொடுத்த ‘திடுக்’ வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோயில் சிலைகளுக்கு அடியில் இருக்கும் எந்திரத் தகட்டை வீட்டில் வைத்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என நம்பி கோயில் சிலைகளை உடைத்து எந்திரத் தகடுகள் தேடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் கீழ் உள்ள பெரியசாமி கோயிலில் கடந்த அக்டோபர் 5-அஅம் தேதி இரவு 14 சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

இந்தச் சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, சிறுவாச்சூரில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்ற பெரியாண்டவர் கோயிலில் உள்ள 13 கற்சிலைகளும் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்டுக் கிடந்தன. அதோடு, கற்சிலைகளின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகள், காசுகள் திருடப்பட்டிருந்தன.

இதேபோல, சிறுவாச்சூர் முருகன் கோவிலில், குதிரை மற்றும் மயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்கிற நாதன் (37) என்பதும், அவர் தான் சிலைகளை உடைத்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், சிலைகளின் அடியில் வைக்கப்படும் ஐம்பொன்னால் ஆன எந்திரத் தகடுகளை வீட்டில் வைத்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள கோயில்களைத் தேர்ந்தெடுத்து இரவு நேரங்களில் சிலைகளை உடைத்து அவற்றின் அடியில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகளைத் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டான்புலியூர் கிராமத்திலுள்ள பதஞ்சலீஸ்வரர் கோயிலில் 3 சாமி சிலைகளை சேதப்படுத்தி அதன் அடியிலிருந்த எந்திர தகடுகளை திருடியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த தொடர்ந்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories