தமிழ்நாடு

”இந்தி திணிப்பு முறியடிப்பு; தபால் அலுவலகம் இனி தமிழ் அலுவலகமாக மாற உறுதியேற்போம்” - சு.வெங்கடேசன் ட்வீட்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இருக்கும் படிவங்களில் அடுத்த 2 வாரங்களில் தமிழ்மொழி இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

”இந்தி திணிப்பு முறியடிப்பு; தபால் அலுவலகம் இனி தமிழ் அலுவலகமாக மாற உறுதியேற்போம்” - சு.வெங்கடேசன் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஞ்சல் துறை தொடர்பான படிவங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ளதாகவும் தமிழ் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அதில் மீண்டும் தமிழை இடம்பெறச் செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தலைமை அஞ்சல் துறைத்தலைவர் செல்வகுமாரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சந்தித்து வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகம் முழுவதிலும் உள்ள அஞ்சல் துறைகளில் இருக்கும் படிவங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மற்றும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கடந்த 22ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறிய அவர், இந்தி திணிப்பை ஏற்க முடியாது. இந்தப் படிவங்களில் தமிழ் மொழி நிச்சயம் இடம் பெற வேண்டும் என்பதை அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் அடுத்த மாதத்திற்குள் அனைத்து படிவங்களிலும் தமிழ்மொழி இடம்பெறும் அதற்கான எழுத்துப்பூர்வ உறுதியை அஞ்சல் துறை தலைவர் வழங்கியுள்ளதாக கூறினார். குறிப்பாக சேமிப்பு கணக்கு மற்றும் பணவிடை படிவங்கள் உள்ளிட்டவைகளில் அடுத்த இரண்டு வாரத்திற்குள் தமிழ்மொழி இடம்பெறும் என தெரிவித்தார்

இதை உறுதிப்படுத்தி தலைமை அஞ்சல் துறை தலைவர் செல்வக்குமாரிடம் கடிதம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட ஒன்றிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். ஒன்றிய அரசின் ஆட்சிமொழி சட்டம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும், தற்போது அஞ்சல் துறையில் தலையிட்டு அதில் வெற்றி பெற்றுள்ளோம், மிக விரைவில் ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அதில் தலையிட செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

பன்மைத்துவத்தை நசுக்கி ஒற்றை புள்ளியை நோக்கி அனைத்தையும் நகர்த்துவது ஒன்றிய அரசின் அரசியல் நிலைப்பாடு, அதை அவர்கள் மிக வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக தமிழகம் மாநில உரிமை, மாநில சுயாட்சி உள்ளிட்டவைகளை நிச்சயம் தொடர்ந்து நிலைநிறுத்தும் எனவும் அதன் ஒரு பகுதியாகதான், அஞ்சல் துறை படிவங்களில் தமிழ்மொழி இடம் பெற செய்தது எனவும் அவர் தெரிவித்தார் .

தமிழில் நடத்தப்படும் அஞ்சலக தேர்வுக்கான கருவி நூல்கள் தமிழிலும் வெளியிட வேண்டும் என்பதையும் இந்த சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் விரைவில், அது வெளியிடப்படும் என நம்புவதாக கூறினார்.

சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத - பொருளாதார கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

banner

Related Stories

Related Stories