நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கி ஏமாற்றிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உமையன் என்பவர் மகன் சிவநாத். இவர் 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என உமையனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, வழக்கில் இருந்து சிவநாத்தை விடுவிக்க உதவுவதாகக் கூறி பல கட்டங்களாக ரூ.43 லட்சம் வரை ஏமாற்றி வாங்கி உள்ளார்.
ஆனால் 6 வருடங்களாக வழக்கில் இருந்து விடுவிக்காமலும், காலம்தாழ்த்தியும் வந்துள்ளார். உமையன் இதுகுறித்து கார்த்திக்கிடம் தொடர்ந்து கேட்டுவந்ததால், சிவநாத் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறி, விடுதலை அறிக்கை ஒன்றையும் மாவட்ட நீதிபதி கையெழுத்துடன் கார்த்திக் வழங்கியுள்ளார்.
இதில் உமையனுக்கு சந்தேகம் வரவே, வேறு வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற உத்தரவை காட்டியுள்ளார். அப்போது நீதிபதி கையெழுத்தை போலியாகப் போட்டு விடுதலை அறிக்கை கொடுத்திருப்பதும், கார்த்திக் என்பவர் வழக்கறிஞரே இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றப் பரிந்துரையின்படி மாவட்டக் குற்றப்பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-2 ல் நடைபெற்றது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், போலி வழக்கறிஞராக செயல்பட்டும், நீதிபதி போன்று கையெழுத்திட்டும் ரூ.43 லட்சம் மோசடி செய்ததற்காக கார்த்திக்குக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து போலிஸார் கார்த்திக்கை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இவர் மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.