நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். இந்நிலையில், பந்தலூரை அடுத்துள்ள மழவன் சேரம்பாடி தனியார் தோட்டம் ஒன்றில் நேற்றிரவு முன்தினம் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
இந்த கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று இங்கு உள்ள சேற்றுப் பகுதியில் சிக்கியுள்ளது. சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க யானைகள் முயன்றும் மீட்க முடியாததால் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த குட்டி யானையின் அருகில் நகராமல் நிற்கும் தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகளின் பாசப் போராட்டம் காரணமாக இறந்த குட்டி யானையின் அருகில் வனத்துறையினர் நெருங்க முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. சுமார் 48 மணி நேரத்தை கடந்தும் தாய் யானை மூன்று யானைகள் உணவு, தண்ணீர் இன்றி பிறந்த குட்டியின் அருகே இன்று நடத்தும் பாசப்போராட்டம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இறந்த குட்டியின் பிரேதத்தை வனத்துறையினர் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால், இரண்டு நாட்களாக தாய் யானையிடம் இருந்து இறந்த குட்டியை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், தாய் உட்பட 3 யானைகளும் சற்று கூட நகராமல், இறந்த குட்டியின் அருகே நின்று யாரையும் அருகில் நெருங்க விடாமல் இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
யானைகள் அங்கிருந்த சென்ற பின்னரே குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றும், குட்டி யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்த குட்டியுடன் தாய் யானை உட்பட மூன்று யானைகள் நடத்திவரும் பாசப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.