சென்னை முடிச்சூர் பீர்கங்கரணை பகுதியில் ஒரு வீட்டில் ரூ.65 ஆயிரம் பணம் மற்றும் 50 கிராம் தங்க நகை, வெள்ளி பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, சென்னை ஏர்போர்ட்டுல் நின்றிருந்த காரையும் திருடிக்கொண்டு திருச்சிக்குத் தப்பிச் செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை போலிஸார் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலிஸாரைத் தொடர்பு கொண்டு திருடனைக் குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி போலிஸாருக்கும் தொடர்பு கொண்டு திருடனைக் குறித்த தகவல்களைக் கூறியுள்ளனர்.
இதையடுத்து திருச்சி போலிஸார் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை, சஞ்சீவி நகர், பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதுார் பிரிவு ரோடு, பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் திருடனைப் பிடிப்பதற்காக சாலையில் தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதையறிந்த அறிந்த திருடன் காரை நிறுத்தாமல் தடுப்புகளை மோதிவிட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றார். பிறகு போலிஸார் திருடனின் காரைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். போலிஸார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த திருடன் சாரநாதன் கல்லுாரி அருகே காரைத திருப்பி தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.
அப்போது அங்கிருந்த போலிஸார் காரை சுற்றிவளைத்துத் தடுத்து நிறுத்தினர். பிறகு வாகனத்தைவிட்டு இறங்கித் தப்பிச் செல்ல முயன்றார். உடனே போலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தாம்பரத்தைச் சேர்ந்தர் வினோத்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையனிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் திருடனிடம் தீவிரமாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.