விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் அரசு பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டு தனது பெயரில் ரெஜிஸ்ட்ரேசன் செய்த தனியார் நிறுவனம் அதற்கு பராமரிப்பு தொகையாக 90 லட்சம் வரை வசூலித்த விவகாரம் தற்போது ஆதாரபூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் எடப்பாடி ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் அரசு பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டு தனது பெயரில் ரெஜிஸ்ட்ரேசன் செய்த தனியார் நிறுவனம் (S.P.K&co) அதற்கு பராமரிப்பு தொகையாக 90 லட்சம் வரை வசூலித்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 23.7.2018ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில், சாலைகள் அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணியை பார்வையிட S.P.K& co என்ற தனியார் நிறுவனத்துடன் ரூ.611 கோடி 90 லட்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சாலைகள் அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணியை பார்வையிட நெடுஞ்சாலை பொறியாளர்களுக்கு ஜீப் (பொலிரோ) வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சாத்தூர், அருப்புகோட்டை, திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 உதவிக்கோட்ட பொறியாளர்களுக்கு, கோட்டப்பொறியாளர், கண்கானிப்பு பொறியாளர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என மொத்தம் பத்து ஜீப்புகள் 1 கோடியே 19 லட்சம் 50 ரூபாய் செலவில் வாங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் (S.P.K& co) பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட ஜீப்பிற்கு மொத்தம் 6 லட்சத்து 48 ஆயிரம் கிலோ மீட்டருக்கு, 1 கிலோ மீட்டருக்கு ரூ.23 வீதம் 5 ஆண்டுகளுக்கு 1 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரம் பராமரிப்பு செலவு வழங்குவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 89 லட்சத்து 42 ஆயிரத்து 400 பணத்தை அந்த நிறுவனத்தினர் பெற்று விட்டனர்.
அரசு பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டால் அரசு பெயரில் தான் அந்த வாகனம் இருக்க வேண்டும். ஆனால், அரசு பணத்தில் தனது பெயரில் பெயரில் ரெஜிஸ்ட்ரேசன் செய்து கொண்டு உள்ளது. அரசு பணத்தில் தனது பெயரில் கொள்முதல் செய்து அதற்கு பராமரிப்பு செலவும் பெற்று அந்த நிறுவனம் இரட்டை லாபம் பெற்றுள்ளது.
இதில் ஹைலைட்டான விசயம் என்னவென்றால் வழங்கப்பட்டது மொத்தம் 9 ஜீப்புகள் தான் இதற்கு உடந்தையாக இருந்த திருநெல்வேலி கண்காணிப்பு பொறியாளருக்கு இன்னோவா காராக ( கார் பயன்படுத்த கூடாது என்ற அரசு விதியை மீறி) வாங்கி கொடுக்கப்பட்டு அதை பயன்படுத்தி வந்துள்ளார். அதை தற்போது ஒளித்து வைத்துள்ள கண்காணிப்பு பொறியாளர் ஒரு ஜீப்புக்கு எப்படி கணக்கு கொடுப்பது என விழி பிதுங்கி வருகிறார்.
ஆகவே அரசு செலவில் ஒப்பந்த நிறுவனத்தின்பெயரில் வாங்கப்பட்ட வாகனங்களை நெடுஞ்சாலத்துறை பெயரில் மாற்ற வேண்டும் எனவும், இந்த முறைகேட்டில் ஈடுப்பட்ட அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.