சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு தருமபுரி மாவட்டம் செல்லும் வழியில் திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள அதியமான்கோட்டை B2 காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களையும், வழங்கினார். இதனையடுத்து, முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வு காவல் துறையினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்' என்ற பொய்யாமொழி புலவரின் வாக்குக்கேற்ப, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என புகழ்பாடியுள்ளார்.
இதனிடையே, பென்னாகரம் காவல் ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் எவரும் செய்திடாத நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக்காட்டியிருக்கிறார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்தது உள்ளம் பூரிக்கிறது. எனது 35 ஆண்டு காவல்துறை அனுபவத்தில் நடந்திடாத ஒன்று இது. எஸ்.ஐ-யின் இருக்கையில் முதலமைச்சரே அமர்ந்து ஆய்வு செய்தது மெய் சிலிர்க்கிறது. அவரது பணி தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என நெகிழ்ச்சி ததும்ப பேசியுள்ளார்.