மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2021) சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், 28 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 23 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முடிவுற்ற திட்டப் பணிகள் விவரங்கள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேச்சேரியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் மற்றும் தம்மம்பட்டியில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 7 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம், 3 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவி, 2 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவைச் சிகிச்சைக் கருவிகள், 5 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக அறுவைச் சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக் கருவிகள்;
வருவாய்த் துறையின் சார்பில் 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் மற்றும் 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செட்டிக்காடு மற்றும் வெள்ளரிவெள்ளியில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள் ;
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 1 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள், 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கெங்கவல்லி வட்டம், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் கைவினை அறை கட்டடங்கள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேப்பிலை மற்றும் அ. தாழையூர் ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாணாரப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி, 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடுப்பட்டி, எம். காளிப்பட்டி ஊராட்சிகள் மற்றும் மன்னநாயக்கன்பட்டி, கோவலன்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் தளவாய்ப்பட்டி ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், வேம்படிதாளம் மற்றும் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையங்கள், 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மல்லமூப்பம்பட்டி மற்றும் வெள்ளரிவெள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையங்கள், 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வராயன் மலை - கருமந்துறை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் குடியிருப்பு , சமையலறை மற்றும் உணவருந்தும் அறை உள்ளிட்ட கட்டடங்கள்;
என மொத்தம் 28 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்:
வருவாய்த்துறையின் சார்பில் கொண்டலாம்பட்டி, மேட்டூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய இடங்களில் 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளருக்கான அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள் மற்றும் தின்னப்பட்டி. வெள்ளாளபுரம் மற்றும் கோனேரிப்பட்டி ஆகிய இடங்களில் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலருக்கான அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள்;
போக்குவரத்துத்துறையின் சார்பில் 1 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாழப்பாடி போக்குவரத்து ஆய்வாளருக்கு அலுவலகக் கட்டடம் கட்டும் பணி;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கு விடுதிக் கட்டடம் கட்டும் பணி,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 1 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மண்டல இணை இயக்குநர் பயிற்சி அலுவலகக் கட்டடம் கட்டும் பணி.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 1 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டும் பணி,
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 12 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் பொதுமக்கள் தொடர்பு பகுதி மற்றும் விற்பனை வளாகம் அமைக்கும் பணிகள் மற்றும் 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேச்சேரியில் செம்மறி ஆட்டின திரவ விந்து உற்பத்தி நிலையக் கட்டடம் கட்டும் பணி,
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ஆத்தூர் நகராட்சியின் சார்பில் தேசிய நகர்புர வாழ்வாதார திட்டத்தின் கீழ் 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளின் பாதுகாப்பாளர்களுக்கு தங்கும் விடுதிக் கட்டடம் கட்டும் பணி என மொத்தம் 23 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 13 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.