இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காகப் பிரதமர் மோடி "பிஎம் கேர்ஸ்" என்ற நிதியத்தை அறிவித்தார். இதற்கு பலரும் நன்கொடைகள் அளித்தனர்.
இதையடுத்து கொரோனா உச்சத்திலிருந்தபோது பிஎம் கேர்ஸ் நிதியைக் கொடுத்து மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்றும் மருத்துவ கருவிகளை வாங்கப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு பிஎம் கேர்ஸ் நிதியைப் பயன்படுத்தவில்லை.
இதனால் இந்த நிதி தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது பிஎம் கேரஸ் நிதி அரசாங்கத்திற்குச் சொந்தமான பணம் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனிநபர் மோசடியை விட பெரிய மோசடி பிஎம் கேர் நிதியில் நடந்துள்ளது என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறிய முத்தரசன்,"பிரதமர் கேர் நிதியில் நடந்திருக்கும் மோசடி, தனிநபர் மோசடியை விடப் பெரிய மோசடி. இந்த நிதி கணக்கில் வராதது, தணிக்கை வரம்பிலும் வராது எனக் கூறுகின்றனர்.
இதுவரை அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. இந்த நிதி தொடர்பாக வரவு, செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த நிதி முழுவதையும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.