திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள திருமலை கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் மணிகண்டன். இவருக்கும் திருவண்ணாமலை டவுன் பகுதியை சேர்ந்த சேகர் சுந்தரி தம்பதியினரின் 15 வயதான மகள் ரம்யாவுக்கும் (பெயர் மாற்றபட்டுள்ளது) இருவீட்டாரின் சம்மதத்துடன் போளுர் தாலுகா வம்பலூர் கிராமத்தின் அருகில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
நேற்று திருவண்ணாமலை குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை மையத்திற்கு மைனர் திருமணம் நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை சமூக நலத்துறை அதிகாரிகள் திருமலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் விசாரணை நடத்தி, மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்யபட்டதாக கூறி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சமூகநலத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் மற்றும் பெண்ணின் பெற்றோர் சேகர் சுந்தரி ஆகிய 3 பேரை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆரணி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த சம்பவத்தில் மாப்பிள்ளை உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.