சென்னை எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகத்திற்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரிடம் தகராறு செய்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டின் பின்புறம் ஓட்டை பிரித்து உள்ளே குதித்து ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி விட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
பிறகு ஆறுமுகத்தின் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்களைக் கண்டு காலி மது பாட்டில்களை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகத்தின் தாய் சரோஜா எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சடலமாக கிடந்த ரவுடி ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை ஈடுபட்டபோது பங்லா பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலிஸார் இரண்டு தொழிற்கல்வி மாணவர்கள் உட்பட கிளின்டன், ஜெயக்குமார், வினோத்குமார், தேசப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆறுமுகத்தின் தந்தை ராஜபாண்டி என்பவரை வெட்டியதால் அதன் தொடர்பாக ராஜபாண்டியன் தூண்டுதல் பேரில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. எண்ணூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியை அரிவாளால் வெட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.