தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பாரீஸ் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா. இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஒருவருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்துவந்த இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதில் மனைவி மீது பாலமுருகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதேபோல், பாலமுருகன் மீது இலக்கியாவும் புகார் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த வாரம் இலக்கியா கணவன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது நாம் இனிமேல் சண்டைபோடாமல் இருக்கலாம். வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இருவரும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இலக்கியா செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து அவரிடம் பாலமுருகன் கேள்வி கேட்டுள்ளார். நான் அப்படித்தான் பேசுவேன் என கூறியதால் மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இலக்கியா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் கணவனைக் குத்தியுள்ளார்.
சண்டையறிந்து வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த பாலமுருகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலமுருகனிடன் உறவினர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் இலக்கியாவை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சண்டையின் போது கணவனுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.