ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது
இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் அலமேலு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தி.மு.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்த அனைவரும் வாபஸ் பெற்றனர்.
தி.மு.க வேட்பாளர் அலமேலு ஆறுமுகம் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சான்று வழங்கினார். தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை எனக்கூறி அ.தி.மு.கவினர் உதவி தேர்தல் நடத்தும் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது அங்கு வந்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நேற்றுமுன்தினம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.கவினர் தகராறு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது