கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்னி மடத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்ட சுஜாதா, தன்னை ஒரு சாமியார் என்றும் தனக்கு கடவுள் அருள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிற்கு மாங்கல்யதோஷம் இருப்பதாகவும், அதனால்தான் இரண்டு மகள்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதாகவும் சுஜாதா கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சுஜாதாவின் பேச்சைக் கேட்டு தோஷத்தை போக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சுஜாதா, வீட்டில் உள்ள நகைகளை எடுத்துவந்து கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண்ணும் நகைகளைக் கொடுத்துள்ளார். அந்த நகையை வீட்டில் வைத்து பூஜை செய்வதாகக் எடுத்துச் சென்று பின்னர் திரும்பிக் கொடுத்துள்ளார்.
சில நாட்களில் அவர் திரும்பிக் கொடுத்த நகைகள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சுஜாதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 22 சவரன் நகைகளை மீட்டு போலிஸார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.