தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல்துறை டி.ஜி.பியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பு ஆபரேஷன் மேற்கொள்ள அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று இரவு கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களில் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ரவுடிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள மற்ற மாநகர பகுதிகளிலும், மாவட்டங்களிலும் விடிய விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரௌடிகளின் வீடுகளிலும் போலிஸார் ரெய்டு நடத்தினர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டனர். இன்று காலை வரை 560 ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுதும் கைதான ரவுடிகளிடமிருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து மாநிலம் முழுவதும் 48 மணிநேர ரவுடிகள் வேட்டையை தொடங்க உத்தரவிடப்பட்டது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.