திருநெல்வேலியைச் சேர்ந்த பேராசிரியரான சுபாஷினி என்பவர் ஓவியர் ஆதிஸை அண்மையில் மறுமணம் செய்து கொண்டார். மதுரையில் நடந்த இந்த திருமணத்தின்போது சுபாஷினியின் மகன் தர்ஷன் தனது தாயின் மறுமணத்திற்குத் தாலி எடுத்துக் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த படத்தைப் பார்த்து பலரும் நெகிழ்ச்சியடைந்து, தர்ஷனுக்கும், புதிய தம்பதிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிலையில் தந்தை பெரியார்தான் இதை சாத்தியப்படுத்தினார் என மறுமணம் குறித்து சுபாஷினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மறுமணம் குறித்து சுபாஷினி கூறுகையில், “மறுமணம் குறித்து மகனிடம் கூறினேன். இதற்கு அவன் சம்மதம் தெரிவித்தான். திருமணத்தின் போது அவன் கையால்தான் தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அதன்படியே மகன் தாலி எடுத்துக்கொடுத்தான்.
ஆனால், இந்த அளவிற்கு எங்கள் திருமணம் மக்களிடம் வேகமாக சென்றடையும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். ஏதோ ஒரு இடத்தில் மறுமணம் செய்யத் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த திருமணம் உத்வேகத்தை அளிக்கும்.
சமூகத்தில் பெண்கள் குறித்து ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது எங்கள் திருமணத்தின் மூலம் உடையுமானால் அது மகிழ்ச்சியே. மறுமணம் செய்து கொள்ளும் முடிவிற்குத் தந்தை பெரியாரின் கருத்துகளும் ஒரு முக்கிய காரணம்.
பெரியார் வெறுமனே சாதி ஒழிப்பை மட்டும் பேசவில்லை. சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியை உடைத்தவர். 'நான் சொல்றதையும் நீ கேட்காதே; உன் அறிவு தான் உனக்கு பெரிது' என்று அவர் சொன்னது என்னை ஈர்த்தது.
அதேபோல நமக்கான அங்கீகாரம் கிடைக்காத போது முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதுதான் நினைவுக்கு வரும். 'அடிக்கிற காற்றில் குப்பையும் பறக்கும்; காகிதமும் பறக்கும்' இது எனக்கு உந்து சக்தியாக இருந்தது. நமக்கான நேரம் வரும்போது அங்கீகாரம் கிடைக்கும் என்பது உண்மைதான். பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான வேலை நமக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.