நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணரவேண்டும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதிக்கும்-சமத்துவத்துக்கும் எதிரான நீட் தேர்வு இந்தாண்டும் நடைபெற்று முடிந்துள்ளது. நீட் தேர்வு நடைபெறுவதற்கு முதல் நாள் மேட்டூரைச் சேர்ந்த தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். இப்போது, அரியலூர் மாணவி தங்கை கனிமொழி நீட் பயத்தால் மரணமடைந்துள்ளார். தங்கை அனிதாவில் ஆரம்பித்து நம் மாணவர்களை நீட் எனும் கொடுவாள் துரத்தி துரத்தி வேட்டையாடுவது தாங்கொணாத துயரைத் தருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்ததுவரை வராத நீட் தேர்வு, அம்மையார் ஜெயலலிதா இருந்ததுவரை நடைபெறாத நீட் தேர்வு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருந்து ஆட்சியை நடத்தியபோதுதான் தமிழ்நாட்டுக்குள் வந்தது. கலைஞர் அவர்கள் உருவாக்கிய சுகாதார கட்டமைப்பையும்-மருத்துவக் கல்லூரிகளையும் நம்மிடம் இருந்து அபகரித்துக் கொள்ளும் ஒன்றிய அரசின் சூழ்ச்சிகரமான திட்டம்தான் நீட் தேர்வு. அதனை அனுமதித்தது அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு மாணவ மாணவியரின் மரணங்களைக் காரணம் காட்டி தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி குறை சொல்கிறார்.
‘தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வைத் தடுக்க முடியாது’ என்று சொல்லும் பா.ஜ.க.வைக் கண்டிக்க பழனிசாமிக்கு வார்த்தைகள் வரவில்லை. அடித்த கொள்ளையைப் பாதுகாப்பதற்காக ஆட்சியிலிருந்து இறங்கிய பின்னரும் அடிமைகளாகவே அ.தி.மு.க.வினர் தொடர்வதுதான் நீட்டை வைத்து கழகத்தின் மீது அவர்கள் பழிசுமத்துவதற்கு காரணம். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், நான்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது போலவும், அதை நான்தான் நடத்துவது போலவும் என்னை வசைபாடுகிறார்கள். நீட் ஒழிப்புக்கான முகமாக என்னை பார்ப்பதில் ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சியே என்றாலும், எங்களுக்கு வசவுகள் புதிதல்ல.
எதைக்கண்டும் ஓடி ஒளியும் பழக்கம் பெரியார்-அண்ணா-கலைஞர்-கழகத் தலைவர் அவர்களிடம் பாடம் படித்த எங்களுக்கு எப்போதும் கிடையாது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. கடந்த அ.தி.மு.க அரசு சட்டமன்றத்தில் வலிமையற்ற நீட் விலக்கு தீர்மானத்தைப் பெயரளவுக்கு நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அந்த சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டதைக் கூட அடிமைகள் மக்களிடம் கூறாமல் மறைத்தனர். ஆனால், கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அப்படி ‘எடுத்தேன்-கவிழ்த்தேன்’ என்று எதையும் செய்யவில்லை.
தேர்தலில் பல வாக்குறுதிகளை தலைவர் அவர்கள் கொடுத்தார்கள். அதில் முதன்மையானது நீட் விலக்கு பற்றியது. ‘கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என்று மிகத்தெளிவாக நம்முடைய 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை புத்தகம்-பக்கம் 53ல் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வும் இதுபோல வாக்குறுதிகளை 2019 நாடாளுமன்ற தேர்தலில் தந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நம்முடைய அணி பெரும்பான்மையாக வென்றாலும், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திலும் அ.தி.மு.க. அங்கம் வகித்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நீட் ஒழிப்புக்காக செய்தது என்ன? இன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் தள்ளப்பட்டதும் தாண்டிக்குதிக்கும் எடப்பாடி பழனிசாமி, நீட் கொடுமையால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஆறுதலாவது சொன்னது உண்டா? எதுவும் கிடையாது. நம்முடைய முதல்வர் அவர்கள், கலைஞரின் வழி வந்தவர். எதையும் சட்டப்பூர்வமாக - வலிமையாகச் செய்யக்கூடியவர். அந்தவகையில்தான் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வருகிறார். அதன்படி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமான முடிவாக முன்னெடுக்காமல், மிக தீர்க்கமாக அந்தப் பிரச்சினையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அணுகி வருகிறார்கள்.
கழகம் வெற்றி பெற்றதுமே ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வினால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளித்திட, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை கழக அரசு அமைத்தது. தமிழ்நாடு முழுவதுமிருந்து பெற்றோர்கள்-கல்வியாளர்கள்-சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலில் ‘நீட் வேண்டாம்’ என்று அந்தக் குழுவிடம் தெரிவித்தனர். ‘ஏழை-எளிய-கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியாக வலுவற்றுள்ள பெற்றோர்களால் அவர்களின் பிள்ளைகளை நீட் தேர்வுக்கு தயார் செய்ய முடியவில்லை’ என நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில்தான் சட்டப்பேரவையில் நீட் விலக்கிற்கான சட்டமுன்வடிவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார்கள். அந்த சட்டமுன்வடிவு, பா.ஜ.க தவிர, அனைத்து கட்சியினரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி நீட் விலக்கிற்கு தேவையான நடவடிக்கைகளை கழக அரசு தெளிவாகவும்-வலிமையாகவும் முன்னெடுத்து வருகிறது. இந்தச் சூழலில் நீட் பயத்தால் இரு மாணவர்கள் இறந்திருப்பது நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. ‘உலகிலேயே தலைசிறந்தது நீட் தேர்வு’ என வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வை கேள்வி கேட்க துணிச்சலற்ற அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பத்தாண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துவிட்டு, ஆட்சி அமைத்து 4 மாதங்களை மட்டுமே நிறைவு செய்திருக்கும் கழகத்தை நோக்கி கைகாட்டுவது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமும்-காழ்ப்புணர்ச்சியும் மட்டுமேயாகும்.
இந்த நேரத்தில் நான் மாணவ-மாணவியரிடம் ஒரு சகோதரனாக கேட்டுக்கொள்வது ஒன்றுதான். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் கழக அரசு ஈடுபட்டு வருகிறது. தி.மு.கழகம் யாருக்கும் அஞ்சி அடிபணிந்து நடக்கிற இயக்கமல்ல. தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். அதனால், நீட் எதிர்ப்பு நடவடிக்கைகளை கழக அரசு வலிமையுடன் முன்னெடுக்கும். எனவே, நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலையை தீர்வாகக் கொள்ளும் முடிவை, மாணவ-மாணவியர் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தேவையற்ற அழுத்தத்தைத் திணிக்க வேண்டாம். உறவினர் ஒருவர் மருத்துவராக இருக்கிறார் என்பதற்காக ‘நீயும் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றே தீர வேண்டும்’ எனும் அழுத்தங்கள்தான் மாணவர்களை இம்மாதிரியான முடிவுகளை நோக்கி தள்ளுகிறது.
நீட் ஒழிப்பு போராட்டத்தை எல்லோரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம். நீட்டுக்கு எதிரான நம் மாநிலத்தின் எண்ணத்தை வலிமையாக பிரதிபலிப்போம். இது எஜமானர்கள் உதவியோடு கொல்லைப்புற வழியில் அமைக்கப்பட்ட அடிமை அரசு அல்ல. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக அரசு. இந்த அரசு என்றும் தமிழ்நாட்டு மக்கள் பக்கமே நிற்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.