தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, அவ்விரு மாநிலங்களவை இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த 2 காலி இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ஆம் தேதி அறிவித்தது.
செப்.15-ம் தேதி தொடங்கி, செப்.22 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. செப். 23ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு தி.மு.க வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை 2 உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கனிமொழி என்.வி.என்.சோமு, தி.மு.க மருத்துவர் அணி செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். தி.மு.க முன்னோடிகளில் ஒருவரான என்.வி.நடராசனின் பேத்தி. ஒன்றிய அமைச்சராகப் பணிபுரிந்த என்.வி.என்.சோமுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். இவர் தி.மு.கவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான நாமக்கல் கே.ராமசாமியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.