தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் 1980ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்விக் கொடையளித்த கல்லூரிக்கு ஏழை, எளிய மக்கள் பயனடையும் விதத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கான 20 ஆண்டுகால பராமரிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும், தங்களுக்கு பிறகு தங்கள் வாரிசுகளும் இப்பணிகளைத் தொடர்வார்கள் எனவும் மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
41 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்ற மாணவ, மாணவியர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் மருத்துவர்களாகப் பணியாற்றி வரும் நிலையில்,
தங்களுக்கு கல்வி கொடையளித்த கல்லூரிக்கும், அதன் 50 ஆண்டு மருத்துவ சேவையையும், கொரோனா தொற்றின்போதும் சிகிச்சையளித்து ஏராளமானோரை குணப்படுத்திய சேவையையும் பாராட்டும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் களன், அதற்கான கட்டிடம் மின் இணைப்பு 2041ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு பராமரிப்பு ஒப்பந்தம் உள்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் பிளாண்டை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிக்குமார் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் உடனிருக்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு வழங்கினர். மருத்துவர்களின் மனிதநேய பண்பை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.
இதுகுறித்து பேட்டி அளித்த முன்னாள் மாணவர்கள், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவை செய்து வரும் எங்களுக்கு வாழ்வளித்த மருத்துவக்கல்லூரிக்கு எங்களால் இயன்றதை செய்திட வேண்டும் என முடிவெடுத்து, ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் விதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளோம். அதன் 20 ஆண்டுகால பராமரிப்பையும் ஏற்றுள்ளோம். எங்களுக்குப் பிறகு எங்கள் வாரிசுகளும் இப்பணியை தொடர்வார்கள், இது மிகவும் மனநிறைவை அளிப்பதாக உள்ளது” என்றனர்.