நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பவுன்ராஜ் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளரக 4-வது முறையாகப் போட்டியிட்டார்.
இவர் மீது எடக்குடி ஊராட்சி அ.தி.மு.க நிர்வாகியும், ஊராட்சிமன்ற தலைவரின் கணவருமான தங்கமணி (55) என்பவரிடம், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தரப்பினர் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் பெரம்பூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.
இதில், நடவடிக்கை இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவின்பேரில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது கொலைமிரட்டல் வழக்குப் பதிவு செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்கமணியை பவுன்ராஜ் மீண்டும் சாலையில் மறித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அப்போது, அருகில் இருந்த ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் உள்ளிட்ட சிலர் தங்கமணியை அடித்து, உதைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்து மனு ரசீதை வாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஏற்கனவே நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிஸாரால் தேடப்பட்டு வருபவர் மீண்டும் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
மகேந்திரவர்மனை தங்கமணி தாக்கிவிட்டதாக அவரும் ஒரு புகாரை மயிலாடுதுறை காவல்நிலையத்தில அளித்துள்ளார். இரண்டு தரப்பினருக்கும் மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது.